கலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌

கலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌
கலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌

தமிழக அரசு அறிவித்த கலைமாமணி விருதை நடிகர் விஜய் சேதுபதி இன்று நேரில் சென்று பெற்றுக்கொண்டார்.

இயல், இசை நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற கலைப் பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்ட 201 கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. 

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாதவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள  தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் விருது வழங்கி கெளரவித்தார்.  அமைச்சர் க.பாண்டியராஜனிடமிருந்து கலைமாமணி விருது பெற்று கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, விருது கொடுத்த தமிழக அரசுக்கு தமது நன்றியினை தெரிவித்தார். 

பாடலாசிரியர் யுக‌பாரதிக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நடிகர் சந்தானத்தின் விருதை அவரது மேலாளர் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகி ஜானகிக்கு வழங்கப்பட்டது. விருதை ஜானகியின் மகன் பெற்றுக்கொண்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com