பரப்புரை வாகனத்தில் பரந்தூரில் தவெக தலைவர் விஜய்! #Video
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 900 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில்தான் தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த 13 கிராம மக்களைத் தாண்டி வெளியூர் மக்களுக்கு மண்டப வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மண்டபத்திற்கு உள்ளே அல்லாமல் மண்டபத்திற்கு வெளியில் உள்ள காலியிடத்தில்தான் விஜய் மக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேன்களில், விஜய்யை சந்திப்பதற்கு விருப்பமுள்ள அப்பகுதி மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
முதலில் 2000 பேரை திருமண வளாகத்தில் வைத்து சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பின் 5000 பேர் வளாகத்திற்குள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 3000 பேருக்கு மேல் அந்த வளாகத்திற்குள் இருக்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தினைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விஜய் சரியாக 12 மணியளவில் வளாகத்திற்கு வந்து மக்களுடன் உரையாடுவார். விஜய் பேசுவதற்கு முன்பாக போராட்டக்குழுவின் சார்பாக மக்கள் மத்தியில் பேசுவதற்கு 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த 18 பேரும் பேசுவார்களா அல்லது அதில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பேசுவார்களா என்ற விபரம் தற்போது வரை தெரியவில்லை.
பரந்தூர் மக்களைச் சந்திப்பதற்காக கேரவன் வேனில் விஜய் சென்று கொண்டிருக்கிறார். கேரவனில் முன் இருக்கையில் விஜய் அமர்ந்திருக்கிறார். வழிநெடுகிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.