விஜய் மாநாடு | தொண்டர்களை சுரண்டிய ஆட்டோ ஓட்டுநர்கள்... நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜயை நேரில் காணத் தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் காலையிலிருந்தே கொளுத்திய வெயிலை பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். விஜய் மேடையேறி உரையாற்றியதை பார்த்தவுடன், பலர் கூட்ட நெரிசலை தவிர்க்க மாநாட்டு திடலை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
ஆனால் மாநாட்டு திடலிலிருந்து தங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்திற்குச் செல்ல தொண்டர்கள் நடந்து செல்ல முடியாமல் பரிதவித்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில ஆட்டோ ஓட்டுநர்கள், ஒரு கிலோமீட்டருக்கு 100 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலித்தனர்.
தொண்டர்களும் வேறு வழியின்றி அந்த அதிக கட்டணத்தைக் கட்டி ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு தங்கள் வாகன இருப்பிடத்திற்கு சென்றனர்.
பொதுவாக 10–20 ரூபாயில் போகும் தூரத்துக்கு இப்படி 100 ரூபாய் வசூலிப்பது மிகவும் அதிகமாக உள்ளது. மாநாடு நடக்கும் இடத்தில் கண்காணிப்பு இருந்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என சில தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர்.