போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவி யோகா - ஆளுநர் வித்யாசாகர்
இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா விளங்குகிறது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினமான இன்று நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற விழாவில் 55,000 பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுட்டனர்.
தமிழகத்தில், ஈஷா யோகா மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார்.
ஈஷா யோகாவின், சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பேசிய அவர், "யோகா தினத்தின் நோக்கமே ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்தியா யோகாவை, உலக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா உள்ளது. தமிழகம், மகாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் யோகா கற்றுத்தரப்படும்” என்று கூறினார்.