வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் - மாநிலத் தேர்தல் ஆணையம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சீட்டும் வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. இதனிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2ஆம் தேதி நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்த தடையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.