`சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை சொன்னவர் நீதிபதியா?’-வலுக்கும் எதிர்ப்பு

`சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை சொன்னவர் நீதிபதியா?’-வலுக்கும் எதிர்ப்பு
`சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை சொன்னவர் நீதிபதியா?’-வலுக்கும் எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, நாக சைலா, வி.சுரேஷ், சுதா ராமலிங்கம், அய்யாதுரை, ஜிம்ராஜ் மில்டன் உட்பட 21 பேர் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விக்டோரியா கவுரி பல்வேறு வெறுப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும், அந்த பேச்சுகள் இன்னும் யூ டியூப்-பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விக்டோரியா கவுரி, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் ஆவார்.

`கவுரியின் பேச்சுகளின் பின்னணியில் பார்க்கையில், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு வழக்கறிஞரும் அவர் நீதிபதியாகிவிட்டால், அவரது நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்ப முடியுமா?’ என வழக்கறிஞர்கள் தங்கள் கடிதத்தில் இணைத்துள்ளனர். மேலும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக இவர் பேசிய வீடியோக்களின் லிங்க்-ஐயும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக விக்டோரிய கவுரி, தனது ஒரு பேட்டியில், “பார்த்தீர்களேயானால், இஸ்லாம் பச்சை தீவிரவாதம், கிறிஸ்துவம் வெள்ளை தீவிரவாதம்” எனப்பேசியதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து லவ் ஜிகாத் குறித்தும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார். இவை அனைத்தையும்  அவர் ஆர்.எஸ்.எஸ். யூ-ட்யூப் தளத்துக்காக அளித்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், அவரை நியமிக்க அனுப்பிய பரிந்துரையை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அவர் எவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டார் என விளக்கம் கேட்க வேண்டும் எனவும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com