ஜல்லிக்கட்டு குறித்து திரைப்படம் எடுக்கும் திட்டம் இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து புதியதலைமுறையிடம் டெல்லியில் பிரத்யேகமாக பேட்டி அளித்தபோது அவர் இந்த தகவலை தெரிவித்தார். மிருகவதை என்ற அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய வெற்றிமாறன், இதற்காக எந்தவிதமான அரசியல் பின்னணியும் இல்லாமல் தன்னெழுச்சியாக இளைஞர்கள் போராடியது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை விதிமுறைகளுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வெற்றிமாறன் கூறினார். ஜல்லிக்கட்டு குறித்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலைப் படமாக்கும் உரிமையை வாங்கி வைத்துள்ளதாகவும், விரைவில் அதனை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெற்றிமாறன் தெரிவித்தார்.
நடிகை த்ரிஷா மீதான விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த வெற்றிமாறன், அனவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. அவ்வாறு மாற்றுக் கருத்தினைத் தெரிவிக்கும்போது கருத்தால் மட்டுமே அதை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தனிப்பட்ட தாக்குதல்கள் முறையானது அல்ல என்றும் வெற்றிமாறன் கூறினார்.