சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது கார் விபத்தில் சிக்கி சட்லஜ் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதில் வெற்றிதுரைசாமி மாயமானார்.
இதைத்தொடர்ந்து, வெற்றி துரைசாமியை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர், ஊர்க்காவல்படையினர் என பலரும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்து 8 நாட்கள் ஆன நிலையில் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 - 6 கி.மீ தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வெற்றி துரைசாமியின் உடல் தனி விமானம் மூலம் இன்று சென்னைவந்தடைந்த நிலையில், அஞ்சலிக்காக, ராஜகீழ்பாக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் சுமார் இருபது நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், அதிமுகவினர் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தனர். வெற்றி துரைசாமியின் நண்பரும் நடிகருமான அஜித், ஷாலினி ஆகியோர் வந்திருந்தனர். அதே போல் அதிமுக முன்னாள் எம்பிக்கள் பாலகங்கா, சிட்லபாக்கம் இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, டி.கே.எம்.சின்னையா ஆகியோர் வந்திருந்தனர்.
காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 40 நிமிடங்கள் அஞ்சலிக்காக வைக்கபட்ட நிலையில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சி.ஐ.டி.நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், தற்பொழுது வெற்றிதுரைசாமியின் உடலை அடக்கம் செய்வதற்காக கண்ணம்மா பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது