\
Veteran Tamil Author Poomani Dies at 78
பூமணிPt web

தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமை.. எழுத்தாளர் பூமணி காலமானார்!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் இன்று கோவில்பட்டி பாரதிநகரில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெறுகிறது.
Published on

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி காலமானார். அவருக்கு வயது 79. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12-ஆம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி துணைப் பதிவாளராக ஓய்வு பெற்ற அவர், பின்னர் முழுநேர இலக்கியப் பணியில் ஈடுபட்டார்.

கரிசல் மண்ணின் மக்களின் வாழ்வியல், சமூக உறவுகள், சாதி அமைப்பு, உழைப்பாளர்களின் வாழ்க்கை உள்ளிட்டவற்றை யதார்த்தமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர். எழுத்தாளர் பூமணியின், பிறகு, வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி உள்ளிட்ட அவரது நாவல்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

தென் தமிழகத்தின் சமூக வரலாற்றை ஆழமான ஆய்வின் அடிப்படையில் பதிவு செய்த இந்த நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பூமணியின் படைப்புகள் புதிய தலைமுறையினரிடமும் பரவலாக சென்றடைந்தன.

வெக்கை - அசுரன்
வெக்கை - அசுரன்Pt web

பூமணியின் மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கு முன் சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கோவில்பட்டியில் நினைவு அரங்கம் அமைக்கப்பட்டது. அதேபோல் இவருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதையும் நினைவு அரங்கமும் அமைக்க வேண்டும் என எழுத்தாளர்களும் பகுதி மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com