அப்பழுக்கற்ற அரசியல்வாதி நல்லக்கண்ணுவின் 96ஆவது பிறந்தநாள் இன்று!

அப்பழுக்கற்ற அரசியல்வாதி நல்லக்கண்ணுவின் 96ஆவது பிறந்தநாள் இன்று!

அப்பழுக்கற்ற அரசியல்வாதி நல்லக்கண்ணுவின் 96ஆவது பிறந்தநாள் இன்று!
Published on

அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்பதற்கு வாழும் அடையாளமாக திகழ்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. அவர் இன்று தனது 96ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தால் நல்லக்கண்ணுதான் முதல்வர் என்று அனைத்து தரப்பினரும் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு மாற்று கட்சியினர், மாற்று கருத்து கொண்டவர்கள் என்று எல்லோராலும் விரும்பப்படும் நபர் தோழர் நல்லக்கண்ணு. வாழ்க்கையில் சாதிக்க தியாகம் மிக முக்கியம் என்று கூறும் இவர், இன்றுவரை அதிலிருந்து சற்றும் பிறழாமல் வாழ்ந்து வருகிறார்.

பள்ளிப்பருவத்தில் போராட்டத்தை தொடங்கிய நல்லக்கண்ணு, சுமார் 80 ஆண்டுகள் தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் 1925ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். இவரது முதல் போராட்டம் நெல் மூட்டைகளை பதுக்கி வைத்ததற்கு எதிரானது. அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்டம் முதல் மணல் கொள்ளைக்கு எதிராக தீவிரமாக முழங்கியது வரை பல போராட்டக் களங்களை கண்டவர்.

தொழிலாளர்கள் பிரச்னை, விவசாயிகள் போராட்டம், பஞ்சாலை போராட்டம் என இளைஞர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அணிதிரட்ட பலமாக இருந்த நல்லக்கண்ணு, விவசாய சங்க பதவி, கட்சியின் மாநிலச் செயலாளர் என 13 ஆண்டுகள் பொறுப்புகளில் இருந்து பல தலைவர்களிடம் நட்பு பாராட்டியவர்.

ஒருபோதும் பணம், பொருள் மீது ஆசை கொள்ளாதவர் நல்லக்கண்ணு. அவரது 80ஆவது பிறந்த நாளுக்கு கட்சி ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்தது. அதை மீண்டும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொடுத்த போது, பாதி தொகையை கட்சிக்கும், மீது தொகையை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் கொடுத்தவர்.

இந்நிலையில், தோழர் நல்லக்கண்ணுவின் பிறந்ததினத்தை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்தநாளை அடுத்து சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் நல்லக்கண்ணு. பிறந்தநாள் கொண்டாடும் நல்லக்கண்ணுவுக்கு மு.க.ஸ்டாலின், திருமாவளவன், முத்தரசன், தா. பாண்டியன் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பல்வேறு தரப்பினரும் நல்லக்கண்ணுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com