”செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் ஆதாரங்களை அழித்துவிடுவார்” - ஜாமீன் மனு விசாரணையில் காரசார வாதம்

சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிகோப்புப் படம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டார்.

அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆவதாக குறிப்பிட்ட அவர், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிPT Desk

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும் எனவும் செந்தில் பாலாஜிக்கு அது போன்ற நிலை ஏற்படவில்லை எனவும் வாதிடப்பட்டார்.

மேலும், செந்தில் பாலாஜியின் கால் மரத்து போவது சமீபத்தில் ஏற்பட்டது அல்ல எனவும் அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சனை இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.

senthil balaji
senthil balajipt desk

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் காட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிட்டார்.

சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா?

செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா? செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியை கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

செந்தில்பலாஜி தரப்பில் நிச்சயமாக ஆதாரங்களை கலைக்க மாட்டார், ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முயற்சிக்க கூட மாட்டார், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையிடம் இருக்கும் போது அதனை கலைக்க முடியாது என தெரிவிக்கபட்டது.

இதய அறுவை சிகிச்சை சாதாரணமானது என அமலாக்கத்துறை கூறுகிறது என்றும், ஆனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தால் இதே போல கூறுவார்களா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பதை அமலாக்கத் துறையால் நிரூபிக்கவே முடியாது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை தரப்பில்,

சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியும், ஆனால் அது போன்ற நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல்நிற்கவோ, உட்காரவோ செந்தில் பாலாஜியால் முடியவில்லை என கூறுகிறார்கள் என்றும், ஆனால் அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்க வேண்டுமென யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com