4 மணி நேரத்தில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை - தீபாவளி உற்சாகம்
வேப்பூர் ஆட்டு சந்தையில் 5 மணிநேரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை தோறும் கடலூர் மாவட்டம் வேப்பூரில் வார ஆட்டு சந்தை நடத்தப்படுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 50 கிராம பகுதி மக்கள் வருவர். இந்தச் சந்தை, ஆடுகள் விற்பனைக்கு பேர் போனது. பல ஊர்களில் இருந்து வியாபாரிகள் ஆடு பிடிப்பதற்காக இங்கேதான் வருவார்கள். கூடுதல் வருமானத்திற்காக ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவரும் விவசாயிகளுக்கு இந்தச் சந்தை ஒரு மையப் பகுதி.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க சந்தையில் வந்து குவிந்தனர்.
கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு ஆட்டின் விலை 3000 முதல் 20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் அதாவது 4 மணி நேரத்திற்ள் 5000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கு ஆகும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.