காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நேரில் பார்த்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று காரணமாகவும் வயதின் காரணமாகவும் கருணாநிதி உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வந்துள்ள குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியை நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்துள்ளார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறை ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வந்தனர். ஐசியு-வில் சிகிச்சை பெற்ற கருணாநிதியை வெங்கையா நேரில் சந்தித்தார். அவருடன் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். வேறும் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.