மழை பெய்யாவிட்டாலும் நவம்பர் வரை சென்னைக்கு தண்ணீர் - அமைச்சர் வேலுமணி
மழை பெய்யாவிட்டாலும் நவம்பர் வரை சென்னைக்கு தொடர்ந்து 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
பேரவையில் குடிநீர் பிரச்னை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி பதில் அளித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக 15 ஆயிரத்து 854 கோடியே 44 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 123 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறினார்.
இந்த மோசமான சூழலிலும் சென்னைக்கு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீரும், மற்ற பகுதிகளில் 7 ஆயிரத்து 508 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கி வருவதாக தெரிவித்தார். குடிநீர் பிரச்னையை அரசியலாக்காமல் ஆக்கப்பூர்வமான வழிகளை கூற வேண்டும் என கேட்டுக்கொண்ட வேலுமணி, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் இரண்டு வாரங்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும் எனக் கூறினார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை சுட்டிக்காட்டிய வேலுமணி, கல்குவாரி நீரை சுத்திகரிக்க ஆய்வு நடப்பதாகவும் கூறினார்.

