வேலூர்: பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் (60) என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கடை உள்ளது. அப்போது அவருடைய கடைக்கு பட்டாசு வாங்க வந்தவர் ஒரு வெடியை வெடித்து காட்டச் சொல்லியுள்ளார். இதனையடுத்து அதில் இருந்து ஏற்பட்ட தீ கடையில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது கடையின் உள்ளே இருந்த மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகளான தனுஷ் (7) தேஜாஸ் (6) ஆகிய மூவரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மூவரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்.பி செல்வகுமார், குடியாத்தம் ஆர்டிஓ மன்சூத் ஆகியோர் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகே தீ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவரும்.