குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று திரும்பிய வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி
சத்துவாச்சாரியில் வீட்டை உடைத்து சுமார் 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கானார் தெருவைச் சேர்ந்தவர்கள் மாணிக்கவேல் (57) - புஷ்பா தம்பதியினர். பிஸ்கட் வியாபாரம் செய்து வரும் மாணிக்கவேல் குடும்பத்துடன் நேற்று முன்தினம் கும்பகோணத்தில் உள்ள திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு ஊர் திரும்பிய அவர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பீரோக்களில் இருந்த 50 சவரன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் துறையினருக்கு கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மோப்பநாய் லூசி மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.