“அப்பா.. என்ன கடத்திட்டாங்க; பணம் கொண்டு வாங்க”..க்ளைமேக்ஸில் பெற்றோருக்கு பகீர் ட்விஸ்ட்!

“அப்பா.. என்ன கடத்திட்டாங்க; பணம் கொண்டு வாங்க”..க்ளைமேக்ஸில் பெற்றோருக்கு பகீர் ட்விஸ்ட்!

“அப்பா.. என்ன கடத்திட்டாங்க; பணம் கொண்டு வாங்க”..க்ளைமேக்ஸில் பெற்றோருக்கு பகீர் ட்விஸ்ட்!
Published on

செல்போன் வாங்குவதற்காக பெற்றோரிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம் ஆடிய சிறுவர்களை, இரவு முழுவதும் தேடிபிடித்த காவல் துறையினர் அவர்களை எச்சரித்து, அறிவுரை வழங்கி அனுப்பினர்.

வேலூர் மாநகருக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 7ஆம் வகுப்பு படிக்கும் மகனை அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று இரவு கடத்தி சென்றதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் கடத்தப்பட்ட 7ஆம் வகுப்பு சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு, சிறுவனே போன் செய்து "என்னை கடத்தி இருப்பவர்கள் பணம் கொடுத்தால்தான் என்னை விடுவதாக கூறுகின்றனர். ஆகவே நீங்கள் பணத்தை அங்கு இருக்கும் ஆட்டோவில் வைத்துவிட்டு போங்க" எனவும் கூறியுள்ளார்.

இதேபோல் அதிகாலை 4.00 மணி வரை வெவ்வேறு இடத்தை மாற்றிச்சொல்லி அலைய வைத்துள்ளனர். பின்னர் 4 மணிக்கு பணத்தை சிறுவன் சொன்ன இடத்தில் வைத்துவிட்டு பெற்றோரும், காவலர்களும் மறைந்திருந்தபோது, கடத்தப்பட்ட சிறுவனும், கடத்திய சிறுவனும் ஒருவர் மீது ஒருவர் கையை போட்டுக்கொண்டு சிரித்தபடி வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த பெற்றோர் மற்றும் காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்திய பின் எச்சரித்து அனுப்பினர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு சொல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதனால் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனிடம், ’’எனது பெற்றோரிடம் அதிக பணம் உள்ளது; என்னை கடத்திவிட்டு பணம் கேட்டு மிரட்டி கிடைக்கும் பணத்தில் நாம் செல்போன் வாங்கிக்கொள்ளலாம்’’ எனக் கூறி நாடகம் ஆடியதாகவும், சிறுவர்கள் என்பதால் அவர்களை எச்சரித்தும், அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்ததாகவும் கூறினர்.

செல்போன் மோகத்தால் வேலூரில் சிறுவர்கள் நிகழ்த்திய கடத்தல் நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com