வேலூர்: ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்ற நோயாளிகள்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், ஆம்புலன்ஸில் காத்திருந்த நோயாளிகள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸுகளில் நோயாளிகள் அழைத்துவரப்பட்டிருந்தனர். இதய நோய், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளுக்காக வந்திருந்த இவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் படுக்கை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, 'மருத்துவமனையில் மொத்தம் உள்ள 900 படுக்கைகளில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாகும். இவை அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி ஆக்சிஜன் தேவையுடைய நோயாளிகளுக்கும் படுக்கை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட தற்காலிக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் இணைப்பை செலுத்துவதற்கான கருவிகள் போதிய அளவில் இல்லாததால் தாமதம் ஏற்படுகிறது' என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.