ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது
வேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு உரிய பணத்தினை வழங்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஆணையர் குமார் கைது செய்யப்பட்டார்.
வேலப்பாடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாலாஜி கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கான டெண்டர் எடுத்துள்ளார். கொசு ஒழிப்பு பணிக்காக மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு 10 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அந்த தொகைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால் 2 சதவிகித அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் குமார் 22 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதனையடுத்து ஒப்பந்ததாரர் பாலாஜியிடமிருந்து இன்று 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாநகராட்சி ஆணையர் குமாரை கைது செய்தனர். ஆணையர் குமார் தஞ்சையில் பணியாற்றியபோது குப்பைத்தொட்டி வாங்கியது, ஓய்வூதியதாரர்களுக்கான நிதி ஒப்படைப்பு போன்றவற்றில் லஞ்சம் பெற்றதாக அவர் மீது புகார் உள்ளது.