வேலூர் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் சிலர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில், பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வேலூரில் தேர்தலை ரத்து செய்து மாலை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுகுமாறன் என்ற சுயேச்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.
இன்று காலை இந்த மனுக்கல் அவசர வழக்காக எடுத்து விசாரிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர விசாரணைக்குப் பின்னர், மாலையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது வாதிட்ட ஏ.சி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர், பணப்பட்டுவாடா செய்தவர்களை மட்டும் தகுதிநீக்கம் செய்துவிட்டு மற்றவர்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பணப்பட்டுவாடா நடத்தப்பட்ட தொகுதியில் தேர்தல் நடத்துவது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள், இரண்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் நாளை வேலூரில் வாக்குப்பதிவு நடைபெறாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

