பெரும் மாற்றத்துக்கான சிறு துளியாக தெறிக்கும் வேலூரின் `ஆட்டோ நூலகம்’ கான்செப்ட்!
மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் தனியார் கலை கல்லூரி சார்பாக ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நொடி, ஒரு வார்த்தை மனிதனின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். அந்த ஒரு நொடி, ஒரு வார்த்தை இதுவாக இருக்கலாம் என்ற நோக்கத்தில் மாற்றத்தை நோக்கிய கனவின் முதல் படியாக வேலூரில் துவங்கப்பட்டுள்ளது 'ஆட்டோ நூலகம்'.
வேலூரை சேர்ந்தவர்கள் கிரிதரன், அன்பரசன். சமூக செயற்பாட்டாளர்களான இவர்களும், காட்பாடியில் உள்ள தனியார் மகளிர் கலைக் கல்லூரியும் இணைந்து பொது மக்கள் பயணிக்கு ஆட்டோக்களில் சிறிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இதன் துவக்க விழா நேற்று அந்த கல்லூரியில் நடைபெற்றது.
அப்போது இந்த 'ஆட்டோ நூலகத்தை' வேலூர் சிறைத்துறை டிஐஜி செந்தாமரை கண்ணண் துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். இதற்கு ஒத்துழைத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு டிஐஜி செந்தாமரை கண்ணண் பாராட்டுகளை தெரிவித்தார்.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள 'ஆட்டோ நூலகத்துக்காக' எந்த ஒரு பிரேத்யேக ஆட்டோக்களையும் தாயார் செய்யாமல், ஏற்கனவே சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆட்டோக்களில் முதல் கட்டமாக 4 ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேசி, அதில் நூலகத்தை அமைத்துள்ளனர்.
பயணிகள் அமரும் இருக்கைக்கு பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தில் திருக்குறள், தினசரி செய்தி நாளிதழ்கள், மருத்துவ குறிப்பு அடங்கிய புத்தகங்கள், அறநெறி நூல்கள், பொது அறிவு புத்தகம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர் கிரிதரன் கூறுகையில், “தற்போது வாசிப்பு பழக்கம் மக்களிடம் குறைந்து வரும் சூழலில் அதனை மீட்டெடுக்கும் வகையில் இதை முன்னெடுத்துள்ளோம். மேலும் ஆட்டோவில் பயணிக்கும் நேரத்தை மக்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும், தகவல்களை தெரிந்து கொள்ளவும் இதனை உருவாக்கியுள்ளோம். இப்போதைக்கு 4 ஆட்டோகளில் இனிவரும் நாட்களில் தொடர்ச்சியாக எல்லா ஆட்டோகளிலும் செய்ய உள்ளோம். இதை ஓர் நல்ல முயற்சியாக கருதுகிறோம், மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் தனியார் கல்லூரியின் என்எஸ்எஸ் (நாட்டு நலப்பணி) அலுவலர் அமுதா கூறுகையில், “குறுகிய பயணத்திலும் மக்கள் பயணடைய வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் 'ஆட்டோ நூலகத்தை' உருவாக்கியுள்ளோம். ஒரு புத்தகம் ஒரு தலைமுறையை, ஒரு மனிதனை மாற்றியுள்ளது. அந்த வகையில் ஆட்டோவில் பயணிக்கும் 5 நிமிட பயணத்தில் அந்த ஒரு வரி கட்டாயம் யாராவது ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
எல்லா வயதினரும் படிக்கும் வகையில் புத்தகங்களை வைத்துள்ளோம். கூடிய விரைவில் ஆட்டோவில் அனைத்து உதவி எண்கள் அடங்கிய தகவல் பலகையையும் வைக்க உள்ளோம். அந்த வகையில் இந்த பயணம் புத்தகத்துடன் கூடிய இனிய மாற்றத்தை ஏற்படுத்தும் பயணமாக அமையும்” என்றார்.