
உலகப் பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பர பவனி எனப்படும் தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வைக்கப்பட்ட மாதா சுரூபத்தை முன்னாள் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் ஆகியோர் புனிதம் செய்து வைத்தனர்.
பின்னர் முதல் முறையாக மும்மத பிரார்த்தனை நடந்தது. இதில், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது முகம்மது, ஹாஜி. உசேன் சாகிப், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், வேளாங்கண்ணி ரஜத கிரீஸ்வரர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக்காக பிரார்த்தனை நடந்தது.
இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய முகப்பில் இருந்து தொடங்கிய பெரிய தேர்பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு, உத்திரியமாதா தெரு, கடைவீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியை காண வெளிநாடு மற்றும் மும்பை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.