வேளச்சேரி அதிர்ச்சி : இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வேளச்சேரி அதிர்ச்சி : இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வேளச்சேரி அதிர்ச்சி : இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணி 100அடி சாலையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர், 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கண்ட திமுகவினர் பொதுமக்களின் உதவியுடன் அவர்களை மடக்கிப்பிடித்தனர். உடனே அந்த நபர்கள் வாக்கு இயந்திரங்களை உடைக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த 3 பேரும் வேளச்சேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சரத்பாபு உள்ளிட்டவர்கள் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறினார்.

ஏற்கனவே அசாம் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாஜக வேட்பாளரின் காரில் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சைக்குள்ளாகி அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com