தீபாவளி முதல் நீடிக்கும் காய்கறி, பழங்களின் விலை உயர்வு
தீபாவளி நேரத்தில் உயர்ந்த காய்கறிகள், பழங்களின் விலை தொடர்ந்து அதிக அளவிலேயே நீடிக்கின்றன.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒருவாரமாக, கிலோவிற்கு வெங்காயம் ரூ.45, பீன்ஸ் ரூ.80, முருங்கை ரூ.100. ஆப்பிள் ரூ.180, மாதுளை ரூ.150, மஞ்சள் வாழை ரூ.60 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. பொதுவாக பண்டிகைக்கு முன்பாக காய்கறி, பழங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்வது வழக்கம் என்றாலும், இந்த முறை தீபாவளிக்குப் பிறகும் விலை குறையாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் காய்கறி, பழங்கள் தேவையில் பெரும்பங்கு வகிக்கும் ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதம் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
வடமாநில தீபாவளிக் கொண்டாட்டத்தால் அங்கு அதிகளவில் அனுப்பப்பட்டதும் மற்றொரு காரணமாக தெரிகிறது. வீட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் ஏறியுள்ள நிலையில், காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வு நடுத்தர மக்களை பாதித்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் வரத்து அதிகரிக்கும் வரை குறைந்தது ஒரு மாதத்துக்கு காய்கறி, பழங்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்பது வியாபாரிகளின் கருத்தாக இருக்கிறது.

