ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெருந்திரளான மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் விளைவாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மே 22ம் தேதியன்று 11 பேர் உயிரிழந்தனர்.
நேற்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடியில் பதட்டம் நீடித்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
ஒரு தனியார் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் நேர்ந்துள்ள நிலையில். தமிழகத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை எப்படி வந்தது தெரியுமா ? கிட்டத்தட்ட மூன்று மாநிலங்கள் ஸ்டெர்லைட்க்கு அனுமதி தராத நிலையில் கடைசியாக வந்து சேர்ந்த மாநிலம் தமிழகம். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாயகம் லண்டன். அங்கு இயங்கும் வேதாந்தா ரிசோர்சஸ் குழுமத்தின் ஓர் அங்கம்தான் ஸ்டெர்லைட். வேதாந்தா நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா, மேற்கு
இந்தியத் தீவுகள் என உலகின் பல இடங்களிலும் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் அனில் அகர்வால். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ராம்நாத்.
முதல்முறையாக இந்தியாவில் தாமிர உருக்காலையை தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டது. அதற்கான பணிகளை 1994 ஆம் ஆண்டே ஆரம்பித்தது அந்த நிறுவனம். முதலில் குஜராத் மாநிலத்தை குறி வைத்த வேதாந்தா மாநில அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், அப்போதைய குஜராத் அரசு தாமிர உருக்காலைக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. பின்பு, வேதாந்தாவின் கண்கள் அழகான கோவா மீது திரும்பியது, ஆனால் அங்கேயும் சமிட்டியடி, அம்மாநில அரசு அனுமதி தர மறுத்தது.
பின்பு, வளமான மஹாராஷ்ட்ரா மாநிலத்தை நோக்கி வேதாந்தா நிறுவனத்தின் மூளை திரும்பியது. மகராஷ்ட்ரா மாநிலம் ரத்னகிரியை தேர்ந்தெடுத்த வேதாந்தா ரூபாய் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க தீர்மானித்தது. மாநில அரசின் அனுமதியும் கிடைத்தது, ஆனால் மக்களிடம் இருந்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக அப்போதைய அம்மாநில முதல்வர் சரத்பவார், ஸ்டெர்லைட் ஆலை உருவாக்க பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
பின்புதான் வேதாந்தாவின் முழு கவனமும் தூத்துக்குடி பக்கம் திரும்பியது. தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் ஏற்றுமதியும் இறக்குமதியும் எளிதாக இருக்கும் என்று 1996 ஆம் ஆண்டு ஒரு மனதாக அப்போதைய தமிழக அரசிடம் ஆலையை தொடங்க அனுமதி கேட்டது. இந்த ஆலைக்கு அனுமதியும் கொடுக்கப்பட்டு 22 ஆண்டுகளாக மக்கள் போராட்டமும் நடைபெற்று வருகிறது.