\
VCK vs PMK? Parties Drift Towards TVK
vijay, thiruma, anbumaniPT

உரசும் விசிக.. அழுத்தும் காங்., மதிமுக.. நெருங்கும் பாமக.. தவெகவுடன் நகரும் கட்சிகள்!

ஆட்சியிலிருக்கும் தவெகவை ஒரு பக்கம் விசிக உரசும் நிலையில், மறுபக்கம் பாமக நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published on

ஆட்சியிலிருக்கும் தவெகவை ஒரு பக்கம் விசிக உரசும் நிலையில், மறுபக்கம் பாமக நெருக்கம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெக கூட்டணியில் நடைபெறும் இந்த நகர்வுகள், பெரும் கவனம் பெற்றுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியமைத்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இணைந்து, கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றது.

இருப்பினும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக தலைமையில் கூட்டணி அமையவில்லை எனவும், அமைச்சரவையில் பங்கேற்றது கூட்டணியில் இணைந்ததாக பொருளாகாது எனவும் பேசி வருகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், ஆட்சி உறவு வேறு -கூட்டணி உறவு வேறு அல்ல என்றதோடு வார்த்தைகளில் விளையாட வேண்டாம் என சற்றுக் காட்டமாகவே தெரிவித்தார். மறுபுறம், கூட்டணியில் இருந்துகொண்டே பொதுவெளியில் பேசாதீர்கள் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. இப்படியான சூழலில், தவெகவுடன் பாமக நெருங்குவதற்கான சமிஞ்சைகளையும் பார்க்க முடிகிறது.

பாமக, தவெக கொள்கைகள் சார்ந்துபோவதாக பேசியிருந்த பாமக தலைவர் அன்புமணி, சமூக நீதிக் கணக்காய்வு அறிவிப்புக்காக தவெக அரசைப் பாராட்டியிருந்தார். நீர் மேலாண்மை தொடர்பாக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்திய அன்புமணி, அதுதொடர்பாகவும் தவெக அரசை பாராட்டியிருந்தார். 2 எம்எல்ஏக்களை கொண்ட விசிக தனிப்பெரும்பான்மை இல்லாத தவெகவை உரசும் நிலையில், 4 எம்எல்ஏக்களை கொண்ட பாமக நெருங்குவது, அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com