”விஜய் தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார்” - திருமாவளவன்!
பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள தேர்தலாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 இருக்கிறது. 1977-க்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் மாற்றாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய அளவிலான வெற்றியை பெற்றிருக்கிறது. அதேசமயம், தவெக 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாக வென்றிந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கையாக அது இல்லாததால், ஆளுநர் தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காமலேயே இருந்து வருகிறார்.
இந்தசூழலில் தான், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து தவெக கோரி வருகிறது. அந்தக் கட்சிகள் நாளை முடிவுகளை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தான், இன்று ரயில்வே பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்தும், வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விசிக தலைவர் திருமாளவன், ”விஜய் தொலைபேசியில் அழைத்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டார். எங்களுடைய முடிவை இடதுசாரிகள் மூன்று பேரும் சேர்ந்து நாளை தெரிவிப்போம். அது ஒருமித்த முடிவாக தான் இருக்கும். ஆகவே இடதுசாரி கட்சிகள் முடிவு எடுத்த பிறகுதான், நான் முடிவை அறிவிப்பேன். அதிமுக -திமுக கூட்டணி செய்தி என்பது இன்னும் ஒரு வடிவம் பெறவில்லை யூகத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தொடர்ந்து, 118 சட்டமன்ற உறுப்பினர் இருந்தால் தான் தவெக ஆட்சி அமைக்க முடியும் என ஆளுநர் கூறியது, திட்டமிட்ட நெருக்கடி என்று அறிய முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

