”திராவிட கட்சிகள் இல்லாத தமிழகமே பாஜகவின் நோக்கம்.. அவர்களுடன் அதிமுக..” - திருமாவளவன்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு மே மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருந்தாலும் இப்போதே அனைத்துக் கட்சிகளுமே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்ந்தால் பெரும் பின்னடைவை சந்திக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான பாரதிய ஜனதா கட்சியோடு கைகோர்த்து கொண்டு தமிழ்நாட்டை மீட்போம். மக்களை காப்போம் என்று முழங்குவது முரண்ணாக இருக்கிறது.
பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தக் கூடியவர்கள் பாஜகவை சார்ந்தவர்கள். திராவிட கட்சிகள் இல்லாத தமிழகம் என்று கூறிவருபவர்கள் பாஜகவினர். கம்யூனிஸ்ட்கள் இல்லாத பாரதம் கழகங்கள் இல்லாத தமிழ்நாடு இதுதான் அவர்களின் நீண்டகால முழக்கங்களாக இருந்து வருகின்றனர்.
திராவிட கட்சிகளுக்கும், பெரியாருக்கும், அண்ணாவுக்கும் நேர் எதிராக உள்ளன. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவதிக்க கூடிய பாஜகவை எப்படி தோழமை கட்சியாக கருதுகிறார்கள். இது நகைமுரணாக இருக்கிறது. அதிமுகவை விமர்சிக்க வேண்டியது எனது நோக்கமில்லை . அதில் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. நான் ஆதாயம் கருதினால் பாஜகவும் அதிகவும் இணைந்தே இருக்க வேண்டும் என்றுதான் வாழ்த்துவேன். ஆதாயத்தை நான் விரும்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.