பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருமாவளவன் தலைமையில் 15-இல் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
நேற்று திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் முதல்முறையாக கன்னியாகுமரியில் தனது பரப்புரையை இன்று தொடங்குகிறார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
“ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சமபவத்தில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் கீழ், சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை செய்ய வேண்டும். நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் விசாரணை கேட்டு 15-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார். மேலும் பேசிய அவர், பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர் என்றும் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறினார்.

