”1000 வருடங்களுக்கு முன் ஏது இந்து?” - வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து

”1000 வருடங்களுக்கு முன் ஏது இந்து?” - வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து
”1000 வருடங்களுக்கு முன் ஏது இந்து?” - வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து

சமீபத்தில் இராஜராஜ சோழன் இந்து இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தது சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் மணி விழாவை முன்னிட்டு நடைபெற்ற குறும்பட நிகழ்ச்சியில் பேசியிருந்த வெற்றிமாறன், “மக்களுக்காக தான் கலை; மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது.

சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்'' என்று தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

வெற்றிமாறனின் கருத்து விவாதப் பொருளாக மாறியது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செய்கின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன் ” என பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com