வாணியம்பாடி | திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் கைது - கர்நாடக காவல்துறைக்கு எதிராக போராட்டம்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழகத்திலிருந்து சென்று தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சதாம் மற்றும் பிரசாந்த் ஆகியோரை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டனர்.
அப்போது அவர்கள் 13 தங்க செயின்களை கர்நாடகாவில் கொள்ளையடித்து வந்து வாணியம்பாடியில் உள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்ததாக கர்நாடகா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கர்நாடகா காவல்துறையினர் வாணியம்பாடிக்கு வந்து கொள்ளையர்கள் கூறிய நகைக் கடைக்குச் சென்று, கடை உரிமையாளர் பாபு என்பவரை கர்நாடகா கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து நகைக் கடை உரிமையாளரை கைது செய்ததாக வாணியம்பாடியில் உள்ள வணிகர் சங்கத்தினர் மற்றும் நகைக் கடை உரிமையாளர்கள் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதையடுத்து கர்நாடக காவல்துறையினருடன், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் மூலம் வணிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நகைக் கடை உரிமையாளர் பாபுவிடம் உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக கர்நாடகா காவல்துறையினர் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு வணிகர்கள் சங்கத்தினர் மற்றும் நகைக் கடை உரிமையார்கள் கலைந்து சென்றனர்.. மேலும் கைது செய்யப்பட்ட பிரசாந்த் மற்றும் முகமது சதாம் ஆகியோர் மீது ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட வழிப்பறி தொடர்பான வழக்குகள் இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.