வாணியம்பாடி | நகைகளுடன் தலைமறைவான அடகு கடை உரிமையாளர் - மீட்டுத்தரக் கோரி போலீசில் புகார்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர் யாசின். இவர் தனது தம்பி முபஷீர் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருமண பணிக்காக வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள ரமேஷ்வர்லால் என்ற அடகு கடையில் அடகு வைத்துள்ளார்.
இந்நிலையில், தங்க நகையை மீட்கச் சென்ற போது, ஒருவார காலத்திற்கும் மேலாக நகைக்கடை மூடப்பட்டுள்ளதால், நகைக்கடை உரிமையாளரான பிரவீன் குமார் என்பவரை கண்டுபிடித்து, அவரிடம் உள்ள தனது தங்க நகைகளை மீட்டுத்தரக் கோரி, யாசின் இன்று வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளர் பிரவீன் குமார் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.