வந்தவாசி: ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த நிலங்கள்.. கழிவுநீரால் கரம்பாகி மலடான சோகம்!

வந்தவாசி: ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த நிலங்கள்.. கழிவுநீரால் கரம்பாகி மலடான சோகம்!
வந்தவாசி: ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த நிலங்கள்.. கழிவுநீரால் கரம்பாகி மலடான சோகம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி விவசாய நிலங்கள், நகராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் உப்பு நீராக மாறி மண் மலடாகிவிட்டதோடு விவசாயம் செய்யமுடியாமல், கரம்பாக காட்சியளிக்கும் அவல நிலைக்கு தள்ளபட்டுள்ளது என்றும் அதனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பச்சை பசேல் என பச்சை போர்வை போற்றிய நிலையில் இருந்த, முப்போகம் விளைந்த 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கரம்பாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. வந்தவாசி நகராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் மண் மலடாகி அழிந்து வருவதால் விவசாயம் கடந்த 5 வருடங்களாக பாதிப்புள்ளாகி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உப்பு நீராக மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளதால், விரைவாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி B ஏரி தற்சமயம் நீர் நிரம்பி காட்சி தருகின்றது. இந்த B ஏரியின் பாசன பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள், 100 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் இருந்து வருகின்றன. கடந்த ஐந்தாண்டு காலத்திற்கும் மேலாக 250க்கும் மேற்பட்ட ஏக்கர் பாதிரி மகசூல் விவசாய நிலங்கள், எந்த ஒரு விவசாயியாலும் விவசாயம் செய்யப்படாமல் கரம்பாக மாறி காட்சியளிக்கிறது.

காரணம் வந்தவாசி நகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் Bஏரி கால்வாய் வழியாக இணைக்கப்பட்ட பகுதியில் ஓடி விவசாய நிலத்தில் புகுவதால் விவசாயத்திற்கான நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இதனால் கடந்த ஐந்து வருட காலமாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்கள். மேலும் விவசாய அறுவடை நேரத்தின் போது பன்றிகள் வந்து விளைச்சலை தின்று விடுவதால் மீதமிருந்த விவசாயிகளும் விவசாயத்தை அறவே கைவிட்டு சென்றதாக கூறுகின்றனர்.

15 வருடங்களாக கழிவு நீர் கலக்கும் அவலம்!- வந்தவாசி பி ஏரி உப்புநீராக மாறிவருகிறது

இதுகுறித்து விவசாயிகள் கூறும் பொழுது, மூன்று தலைமுறைகளாக முப்போகமும் விவசாயம் செய்து வரும் நிலங்கள், தஞ்சாவூர் டெல்டா பகுதி போல் ஏக போகமாக நெல், கரும்பு, விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வந்தவாசி நகராட்சி குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது Bஏரி கால்வாயில் விடப்படுகிறது. மேலும் செப்டிக் டேங்க் நீரும் கழிவுநீரில் கலந்து வருவதால், இதனால் Bஏரி நீர் உப்பு நீராக மாறுகின்ற அவலம் ஏற்படுகிறது. இந்த அவலத்தைப் போக்க நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்து, கழிவுநீரை வெளியேற விடாமல் பாதுகாக்க கூறி இருந்தோம். ஆனால் இதுவரை கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இப்படியே போனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும்!

இதனால் கடந்த ஐந்து வருட காலமாக, எந்தவிதமான விவசாயப் பணிகளும் செய்யப்படாமல், நாற்று பயிர் விட்டாலே கருகும் நிலையில் எந்த வித பயிரும் வைக்க முடியாமால் மண் மலடாக மாறியதால், விவசாயம் செய்யாமல் கரம்பாக விட்டுவிட்டோம். இதற்கு அரசாங்கம் தான் தகுந்த நடவடிக்கை எடுத்து நகராட்சி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அதை அமைத்தால் மட்டுமே விவசாயிகளையும், நாட்டின் முதுகெலும்பு என கூறப்படும் விவசாயத்தையும், காக்க முடியும் என கூறுகின்றனர். மேலும் விளைச்சல் தரும் நேரத்தில் பன்றிகள் தொல்லை காரணமாக முற்றிலுமாக விவசாயம் கைவிடபட்டது என ஆதங்கத்தை வேளிபடுத்தினர்.

ஏரியையும், விவசாயத்தையும் பாதுகாக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்! 

இது குறித்து பாதிரி ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டதற்கு, விவசாயம் அழிந்து வரும் நிலையில் பல்வேறு முறைகள் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் ஏரி கால்வாயில் கலக்காமல் பாதுகாக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கூறினார்.

எவ்வாறாக இருந்தாலும் விவசாய இடர்பாடுகளை களைய அரசாங்க அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், துல்லியமாக கணக்கிட்டு நகராட்சி நிர்வாகத்திடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் மட்டுமே விவசாயத்தை காக்க முடியும். இல்லையென்றால் பாதிரி ஏரி, அதன் பாசனம், விவசாய நிலங்கள், அனைத்தும் கிராம நிர்வாக அலுவலர் வரைபடத்தில் மட்டுமே இருக்கும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com