காணும் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் நாளை மறுதினம் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் அன்று பொது மக்கள் சுற்றுலாத் தளங்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அங்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூங்கா வளாகத்திற்குள் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வருவோருக்கு உதவிட தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. 33 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.