“கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்”-முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு பாஜகவின் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னாள் கோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. அந்த விபத்தில் அவ்வழியே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ராஜேஷ்வரி நிலைத்தடுமாறி விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. அந்த விபத்தில் சிக்கிய அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தப் பிரச்னை தமிழகம் முழுவதும் சர்ச்சையை எழுப்பியது.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் அதிவேகமாக வண்டியை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. விசாரணை செய்த காவல்துறையினர் விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்தனர். அதில் விபத்துக்கான காட்சிகள் பதிவாகி இருந்தன. ஆகவே அதனை வைத்து வழக்குப் பதியப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய ராஜேஷ்வரி இன்னும் சுயநினைவுக்கு திரும்பவில்லை. நாகானந்தன் மற்றும் சித்ரா தம்பதியினருக்கு ஒரே மகள் ராஜேஷ்வரி. இவர் ஒரு பிபிஏ பட்டதாரி. குடும்பத்துடன் சிங்காநல்லூரில் வசித்து வந்த இவரது குடும்பம் சில தினங்களுக்கு முன் கோவைக்கு மாறியது. அங்குள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் ராஜேஷ்வரி சில வாரங்களுக்கு முன்புதான் அக்கெளண்ட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இவரது குடும்பம் இப்போது இந்த விபத்தால் மேலும் சிரமத்தை சந்தித்து வருகிறது.
அறுவைச் சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆகவே அந்தக் குடும்பத்தினர் பொதுமக்களிடம் நிதி உதவிக்கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது.
அதற்கான செய்தி லிங்கை குறிப்பிட்டு கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு பாஜகவின் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை உடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார். சாதாரண குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.