“அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு, நயினார் நாகேந்திரனின் பேச்சு காரணமில்லை”- வானதி சீனிவாசன்

“அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு, நயினார் நாகேந்திரனின் பேச்சு காரணமில்லை”- வானதி சீனிவாசன்
“அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு, நயினார் நாகேந்திரனின் பேச்சு காரணமில்லை”- வானதி சீனிவாசன்

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நகராட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு, நயினார் நாகேந்திரனின் பேச்சு காரணமில்லை” என தெரிவித்தார். முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாணவி லாவண்யா மரண வழக்கு குறித்தும் பேசியிருந்தார் வானதி சீனிவாசன். அதுகுறித்து பேசுகையில், “சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரியலூர் மாணவி லாவன்யா தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதனை வரவேற்கிறோம். இந்தச் சம்பவத்தில் நீதி வழங்கி, வழக்கை சிறப்பாக கையாண்ட வழக்கறிஞர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.

தன்னை மதமாற்ற முயற்சிப்பதாக மாணவி தனது வாக்குமூலத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பாஜக இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. மாணவி மரண வாக்குமூலத்தில் மத மாற்றத்தை பற்றி பேசுகிறார். ஆனால் காவல் உயர் அதிகாரி இல்லை என சான்று கொடுக்கிறார். விசாரணையில் உண்மை வெளிவருமென நம்புகிறோம்.

இப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியாக இருக்கும் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் உடனடியாக அவரது குடும்பத்தினரை சந்தித்து அதனை வேறு விதமாக மாற்றிய வந்தார். ஆனால் இப்போது மாணவி லாவண்யா மரணத்திற்கு எவ்வித கருத்தும் சொல்லாமல் இருந்து வருகின்றார். பதவி ஏற்ற சிறிது காலத்தில் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இனிமேல் இப்படியொரு உயிரிழப்பு நடக்க கூடாது; கட்டாய மத மாற்றத்தை அரசு தடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்துள்ள தீர்ப்பை காணும்போது, அந்த உத்தரவு மூலம் லாவன்யா மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளதாக நம்புகிறோம். ஏனெனில் ஆரம்பம் முதலே மிக மோசமாக காவல்துறை இந்த வழக்கை கையாண்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து நகராட்சி தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் குறித்து அவரிடம் கேட்டபோது, “கோவையில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட பாஜக தயார் நிலையில் உள்ளது. நயினார் நாகேந்திரன் கருத்து அதிமுக உடனான கூட்டனி முறிவுக்கு காரணம் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை பொருத்தவரை அதிமுக-வை மதிக்கிறோம். அதிமுக மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளும் தொண்டர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com