வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நல குறைவால் காலமானார் - தலைவர்கள் இரங்கல்
கோவையை சேர்ந்தவர் அமுல்கந்த சாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அமுல் கந்தசாமி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மோசமானதை அடுத்து, கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்தபோது அமுல்கந்தசாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார். அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ வை நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான அன்னூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அமுல் கந்தசாமிக்கு வயது 60. 2021 தேர்தலில் 49.34% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமாக அமுல் கந்தசாமி பணியாற்றி வந்தார்.
முதல்முறை எம்.எல்.ஏவான அமுல் கந்தசாமி முதல் கூட்டத்தொடரில் கலந்துகொண்டபோது, “இந்தக் கூட்டத்தொடரில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பாக சட்டமன்றத்தில் முதன்முதலில் பேசும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது. மிகவும் உணர்வுபூர்வமான அனுபவம் இது. அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகளின் விவாதங்களில் நான் பேசினேன்.
கோயில் புனரமைப்பு தொடர்பாக நான் வைத்த முதல் கோரிக்கையை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தார். அது மகிழ்ச்சியாக இருந்தது. தொழிலாளர் நலத்துறை குறித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சில டிப்ஸ்களைக் கொடுத்தார். மொத்தத்தில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியக் கூட்டத்தொடர் இது.’’ என்று தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.
அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர். அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @AIADMKOfficial” என்று இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினரும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளராருமான திரு. அமுல் கந்தசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
விகே.சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி, கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.அமுல் கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு.அமுல் கந்தசாமி அவர்கள் தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். கழகம் ஒன்றிணையவேண்டும், தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் அமையவேண்டும் என மிகவும் பிரயாசைப்பட்டவர். அவரது நல்ல எண்ணம் கண்டிப்பாக ஈடேறும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திரு.அமுல் கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், அ.தி.மு.கட்சியின் நண்பர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.