திருவள்ளூர்: நீர்-நிலம்-காற்று மாசடைவதுகுறித்து வில்லு பாட்டுடன் விளக்கம்; களைகட்டிய வல்லமை திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள தூய மதலேனா மரியாள் ஆலயத்தின் சார்பில் வல்லமை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், அனைத்து ஐக்கிய குழுவில் இருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், புலியாட்டம், சிலம்பம், பறையாட்டம் ஆகியவை சபையோரால் நடைபெற்றது.
மேலும், சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களும் தேசிய கொடியை கையில் ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், நடைபெற்ற வில்லுப் பாட்டு நிகழ்ச்சியில், நீர், நிலம், காற்று உள்ளிட்ட பஞ்ச பூதங்களை தற்போதைய தொழிற்நுட்பம் எவ்வாறு சீரழிக்கிறது என்றும், இளம் தலை முறையினர் சமூக வலைதளங்களின் மூலம் எவ்வாறு நேரத்தை வீணடிக்கின்றனர் என்றும் சொந்தங்களை மறந்து வாழ்வில் எவ்வாறு தனிமையை பெறுகின்றனர் என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
கிறிஸ்தவ சபையில் நடந்த நிகழ்ச்சியில் இந்து இஸ்லாம் கிறிஸ்தவ மக்களின் சமூக ஒருமைப்பாட்டை பேணும் விதமாக மும்மதத்தினரின் நற்கொள்கைகளை எடுத்துரைத்தது அப்பகுதியில் வரவேற்பை பெற்றது.