`பொறுத்துக் கொள்ள மாட்டோம்’- இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து

`பொறுத்துக் கொள்ள மாட்டோம்’- இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து
`பொறுத்துக் கொள்ள மாட்டோம்’- இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து

“தாய்மொழி தமிழ், வாழ்வுக்கான மொழி. ஆங்கிலம் வசதிக்கான மொழி, இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும்” என இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கூறி இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வி.ஜி.பி குழுமத் தலைவர் தொழிலதிபர் வி‌.ஜி.சந்தோசம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு.ப.வீரபாண்டியன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குநர் கெளதமன் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து, “வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது.இது புதிதல்ல, இந்தி திணிப்பதும், தமிழன் எதிர்ப்பதும் 85 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழை அதிகாரத்தால், அந்நியர்கள் படையெடுப்பால், மதத்தால், சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது சட்டத்தால் எதிர்க்க பார்க்கிறார்கள்.

இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணியில் இனி இடம்பெற முடியாது என மெல்ல மெல்ல இந்தி திணிக்கப்படுகிறது. தாய்மொழி தமிழ் வாழ்வுக்கான மொழி, ஆங்கிலம் வசதிக்கான மொழி.தமிழ் மற்றும் ஆங்கிலத்தை படித்தால் வாழ்வோடும் வசதியோடும் இருக்கலாம். இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும்.

ஒன்றிய அரசின் பரிந்துரை வெற்றுரை, புரம் தள்ள வேண்டியது நமது கடமை. இந்தி மொழிக்கு வரலாறு குறைவு, இலக்கியங்கள் குறைவு
5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழை எப்படி புறம் தள்ள முடியும்? தமிழ் மொழிக்காக அண்ணா, கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்டோர் இரு மொழி கொள்கையை கட்டிக் காக்கின்றனர். இருமொழி கொள்கைதான் எங்களது கொள்கை.

ஐ.நா, மன்கிபாத் போன்ற இடங்களில் தமிழை பிரதமர் மேற்கோள் காட்டுவது மகிழ்ச்சி. ஆனால் சம்ஸ்கிருதத்திற்கு செலவு செய்யும் நீங்கள் தமிழுக்கு ஏன் குறைவான செலவு செய்கிறீர்கள்? இந்தி திணிப்பு இதற்கு முன் வந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் கொசு போல நசுக்குவது கண்ணுக்கு தெரியும். ஆனால் இப்போது இந்தி திணிப்பு வேறு வடிவத்தில் வருகிறது.

1938 மற்றும் 1965 ல் நேர்ந்த இந்தி எதிர்ப்பு எழுச்சியை விட 2022 ல் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும். மாரட்டிய மொழிக்குள் இந்தி மெல்ல நுழைந்தது. தமிழுக்கு அப்படியொரு நிலை வரும் என நினைக்கிறார்கள். ஆனால் நடக்காது. தமிழ் நமது அடையாளம், இந்திய ஒன்றியத்தில் தமிழ் தான் தமிழர்களின் அதிகாரம்.

பிள்ளைகளை தமிழ் படிக்க வையுங்கள், தமிழில் உரையாடுங்கள், தமிழை எழுத படிக்க செல்லுங்கள்.இந்தி மீது எந்த வெறுப்பும் இல்லை, இந்தியாவில் இந்தியும் ஒரு மொழிஅண்டை மாநில மொழிகளை, சகோதர்களை நாங்கள் மதிப்பது போல் இந்தியையும் மதிக்கிறோம்.ஆனால் இந்தியை எந்தவிதத்திலும் திணிக்க கூடாது. இந்தி பேசாத மாநிலங்கள் கருத்தை கேட்டு விட்டு சட்டம் இயற்றுங்கள்” என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய சுப.வீரபாண்டியன், “நம் எல்லோருக்கும் முகங்கள், உருவங்கள்தான் வேறு. ஆனால் மொழி ஒன்று தான். 85 ஆண்டுகளாக இந்தி திணிப்புக்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது தமிழகத்தின் எல்லையை தாண்டி இந்தி எதிர்ப்பு போராட்டம் விரிவடைந்துள்ளது. 1985ம் ஆண்டு போராட்டம் நடைபெற்ற போது மற்ற மாநிலங்கள் வேடிக்கை பார்த்தது. தற்போது கேரளா, ஆந்திரா பஞ்சாப் உள்ளிட்ட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

வங்காளத்தில் ஒரு படி மேலாக அண்ணா, கலைஞரின் படம் ஏந்தி போராடி வருகிறார்கள் என பேசினார். மேலும், இந்தி திணிப்புக்கு எதிராக இந்தியர்களின் போராட்டமாக மாற வேண்டும். இந்தியா முழுவதும் இரு மொழி கொள்கை வரும் போது மொழி சிக்கல் நீங்கி இந்தியா வளர்ச்சி அடையும். தாய் மொழி காப்போம் - எம்மொழி திணிப்பையும் எதிர்ப்போம்” என பேசினார்.

பின்னர் உரையாற்றிய தயாரிப்பாளர் ராஜன், “தமிழக முதலமைச்சர் தமிழை காக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் காரர்களே மதிக்காத வா.உ.சி, பாரதியாருக்கு சிறப்பு செய்தவர் தமிழக முதலமைச்சர். தமிழ் புலவர்களுக்கு சிறப்பு செய்கிறார், இந்தி திணிப்புக்கு எதிராக நின்று தமிழ் மொழியை காக்கிறார். இந்த ஆட்சியை காப்பாற்ற தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் முதலமைச்சர் பின் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com