ஓரக்கண்ணாவது காட்டுங்களேன்: மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை

ஓரக்கண்ணாவது காட்டுங்களேன்: மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை

ஓரக்கண்ணாவது காட்டுங்களேன்: மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை
Published on

உத்தரப் பிரதேச விவசாயிகளுக்குக் காட்டக்கூடிய சலுகையை, வறட்சியின் வன்பிடியில் சிக்கித் தவிக்கும் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’எங்கள் தமிழ்நாட்டு உழவர்கள், ஜந்தர் மந்தரின் வெய்யில் வீதியில் வெந்து வெந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றம் தருகிறது. வேளாண்மையன்றி வேறு தொழில் செய்யத் தெரியாதவர்கள் மட்டும்தான் இன்று வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவது, தேசத்தின் வயிற்றைக் காப்பாற்றுவது போன்றதாகும். மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் அவர்களுக்கு உதவுவதில் அரசியல் பார்க்கக்கூடாது. தனக்கு எதிராகக் குடை பிடித்தவர்களுக்கும் சேர்த்தேதான் மழை பெய்கிறது. தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்த்தேதான் ஓர் அரசு இயங்குகிறது’ என்று கூறியுள்ளார்.

மேலும், ‘இந்திய விவசாயிகள் அழிந்து போனால் பாசன நிலங்களெல்லாம் கூட்டாண்மை நிறுவனங்களின் நாட்டாண்மையின் கீழ் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்தியாவில் இன்னும் சுத்தமாகச் செத்துவிடவில்லை சோசலிசம். சேவைத் துறைக்கு இரு கண்களையும் காட்டும் மத்திய அரசு உற்பத்தித் துறைக்கு ஓரக்கண்ணாவது காட்ட வேண்டும் என்பதுதான் நிகழ் கணங்களின் தேவை. எங்களைத் தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் கூடிப்பேசி வஞ்சித்துவிட்டன. எங்களை வடக்கும் வஞ்சித்து விடக்கூடாது என்று நியாயத்தின் கோட்டுக்குள் நின்று கேட்டுக்கொள்கிறேன். விவசாயத்தைக் காக்கவும் விவசாயிகளை மீட்கவும் இதுவே தருணம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com