“இது சர்வதேச சட்டம்; கர்நாடகா மதிக்கிறதா?” - வைரமுத்து கேள்வி
மேகதாது பிரச்னையை இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என்று கருதாமல் சர்வதேச பிரச்னையாக கருத வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது.
இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “படித்து விட்டு வெளியூருக்கு சென்ற இளைஞர்கள் கிராமங்களுக்கு திரும்ப வேண்டும். அவர்களால் முடிந்த நன்மையை அந்த மண்ணுக்கு செய்ய வேண்டும். மேகதாது பிரச்னையை இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என்று கருதாமல் சர்வதேச பிரச்னையாக கருத வேண்டும்.
ஒரு நதி எங்கு உருவாகுகிறது என்பதை விட எங்கு சேருகிறதோ அங்குள்ளவர்களுக்கே அதிக உரிமை என்பது சர்வதேச சட்டம். அதை கர்நாடகா மதிக்கிறதா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் செயல்படக்கூடாது.
ஏற்கனவே நாங்கள் காய்ந்தும், ஓய்ந்தும், சாய்ந்தும் கிடக்கிறோம். இந்நேரத்தில் எங்களுக்கான நதி தடுக்கப்பட்டால் எங்கள் வாழ்க்கையையே சாகடிக்கப்பட்டு விடும் என தமிழர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து மத்திய அரசு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். மாற்றிக்கொள்ளும் என நம்புகிறோம்.
கஜா புயலில் தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் நன்கு அறிவார்கள். கஜா புயல் பாதிப்பை பிரதமர் வந்து பார்வையிட்டிருக்க வேண்டும். அவ்வாறு பார்வையிட்டிருந்தால் அதிக நிதி கிடைத்திருக்கும். அது தமிழக மக்களுக்கு விரைவில் சென்று சேர்ந்திருக்கும். ஒவ்வொரு குடும்பத்தின் மீட்சிக்கும் மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.