பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை காண ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே குவிந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ரத்தினங்களால் வேய்ந்த ரத்தின அங்கியை அணிந்து, கிளி மாலையுடன் நம்பெருமாள் சுவாமி எழுந்தருளினார். பின்னர் ஊர்வலமாக ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை அடைந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

இதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மிகவும் பழமையான இந்த கோவிலில் அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் இரவு முதலே குவிந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலையில் நடைபெற்றது.

இதனிடையே, வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 12 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி, உற்சவ மூர்த்திகள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகராவின் மனைவி ஷோபா ராவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஏகாதசியை முன்னிட்டு காலை 9 மணிக்கு மலையப்ப சாமி ரதத்தை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். துவாதசியை முன்னிட்டு தெப்பக்குளத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com