வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்களுக்கு படிப்பதே வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவாகும். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா பெருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும் நம்பெருமாள் விஷேச அலங்காரங்களில் காட்சி தருகிறார். இந்நிலையில், இன்று காலை மோகினி என்ற நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதன் அதிகாலையில் சொர்க்கவாசல் வழியாக வருவதே சொர்க்கவாசல் திறப்பு என கூறப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை காலை 5.15 மணிக்கு திறக்கப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.வைகுண்டக் கதவுகள் திறந்து பரந்தாமன் தரிசனம் கிடைப்பதே மார்கழி மாதத்தில் தான் என்பது நம்பிக்கை.
இந்த வைகுண்ட ஏகாதசி உலகப் புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் வெகு விமர்சியாக நடைபெறுவதால் அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்க்காக ஸ்ரீரங்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஸ்ரீரங்கத்திற்கு வரும் நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகளை நிறுத்த ஆங்காங்கே தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.