இலங்கையில் நடைபெற்ற ஈழுத்தமிழர் இனப்படுகொலை குறித்து பொதுவான பன்னாட்டு நீதிபதிகளை கொண்ட சுதந்திரமான விசாரணைதான் தேவை என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு வைகோ மெயில் அனுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தத் தகவலைத் தெரிவித்தார். இலங்கை தமிழர் பகுதிகளில் காணாமல் போன ஒரு லட்சம் பேர் பற்றி எந்த தடையமும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். இலங்கை தீவில் நடைபெற்ற மிக கோரமான ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு கூட்டு குற்றவாளி காங்கிரஸ் தலைமையேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் என்று கூறிய வைகோ, இந்த குற்றச்சாட்டில் இருந்து காங்கிரசும், அந்த அரசில் பங்கேற்ற அரசியல் கட்சிகளும் தப்ப முடியாது என்றார்.
வெளியுறவுக் கொள்கையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக முந்தைய காங்கிரஸ் அரசின் அதிகாரிகள் எப்படி செயல்பட்டார்களோ அதையே பிரதமர் மோடி தலைமையிலான அரசும் பின்பற்றுவது வேதனையளிக்கிறது என்றும் வைகோ கூறினார். கடந்த அரசு எடுத்த அதே நிலைபாட்டை தற்போதைய மத்திய அரசும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக வைகோ தெரிவித்தார்.