“கஞ்சா வைத்திருந்தால் 10 வருடம் சிறை..” தமிழகத்தில் போதைப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்! - வைகோ
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் மதிமுக கட்சி நிர்வாகியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மணமக்களை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத்தை மேற்கோள் காட்டி, படத்தில் வருவது போல தாய்-தந்தை, சகோதரர், சகோதரி என ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு போதைப் பழக்கம் தான் காரணம். தமிழ்நாட்டில் போதை பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.
கோவையில் 18 வயது இளம்பெண்ணை 4 மிருகங்கள், மனிதர்கள் அல்ல 2 கால் மிருகங்கள் வன்கொடுமை செய்ததற்கு காரணம் அவர்கள் போதைப்பொருள் அருந்தியதுதான். அது தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும்.
கஞ்சா விற்பனை செய்தால் 10 வருடம் சிறை என கடுமையான சட்டம் கொண்டு வந்து இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையென்றால் பண்பை வளர்த்த தமிழ்நாடு, உலகத்திற்கு அறிவுரை சொன்ன திருக்குறளை தந்த தமிழ்நாடு எதிர்காலத்தில் பாழாகி போய்விடும் என தெரிவித்தார்.

