மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்டச் செயலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதிமுக பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் வைகோவின் மகன், துரை வைகோவுக்கு தலைமைக் கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் தனி ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதனால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சிவகங்கை மாவட்டச் செயலாளர் சே.செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.என் சண்முகசுந்தரம் ஆகியோரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்து வைகோ உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக சிவகங்கை மாவட்டத்தில் 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியது குறித்து கடந்த மாத இறுதியில் இதற்கு துரை வைகோ புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், " நான் அரசியலுக்கு வந்ததை வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது. கட்டாயத்தின் அடிப்படையில் தலைவர் வைகோவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சிக்கு வந்தேன். தற்போது என்னை எதிர்க்கும் சிவகங்கை மாவட்ட செயலாளர் நான் கட்சிக்கு வர வேண்டும் என பலமுறை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் தற்போது தலைமைக்கு எதிராக பேசுகின்றனர். சில காலம் அவர் செயல்படாமல் இருந்து இருக்கிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட வேலை செய்யவில்லை. கட்சிக்கு எதிராக பேசும் நிர்வாகிகள் மீது கட்சி சட்ட திட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுப்பார்கள். நாளை நடக்கும் பொதுக்குழு கட்சி வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கும்" என தெரிவித்தார்.
துரை வைகோவின் பேட்டியை முழுமையாக இங்கே படிக்கலாம்: 'மதிமுகவில் வாரிசு அரசியல்' போர்க்கொடி தூக்கும் மாவட்ட செயலாளர்கள் - துரை வைகோ பதில் என்ன?