கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் புறக்கணிக்கிறார்கள் - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

நான் அரசியலில் இருந்து விலகி பெரியார் அண்ணா பாதையில் பயணிக்க இருக்கிறேன் என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி பேட்டியளித்தார்.
Durai samy
Durai samypt desk

திருப்பூரில் இன்று மதிமுக அவைத்தலைவர் துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... "மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும். இப்படி கூறியதற்கு காரணம், வைகோவின் துடிப்பு மிக்க பேச்சை நம்பி ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்தனர். ஆனால் தற்போது மதிமுக பொதுச் செயலாளரின் நடவடிக்கையால் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அது வேதனை அளிக்கிறது. மதிமுக-வை காப்பாற்றவே திமுகவுடன் இணைக்க வலியுறுத்தினேன்.

Vaiko
Vaikopt desk

எனது கடிதத்தை புறக்கணிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். கடிதத்தில் கட்சியின் விதிமுறைகள் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் மதிமுக-வுக்குச் சொந்தமான சொத்துக்கள் உள்ளதாகவும், அவை யாவும் தனது தனிப்பட்ட பெயரில் இல்லை என்றும், தொழிற்சங்க பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயரில் உள்ளது எனவும், அவை அனைத்தும் மதிமுக துவங்கப்படுவதற்கு முன்பாகவே வாங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

இதில், மதிமுக-வின் தலைமைக் கழகமான தாயகம் கட்டடம் வைகோவின் தனிப்பட்ட பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கட்சியின் பொருளாளர் எந்த ஒரு காசோலையிலும் கையெழுத்திட்டதில்லை. வைகோவே கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பணம் எடுத்து பயன்படுத்தி வருகிறார். என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த ஒரு தொண்டனும் உளவுப் பூர்வமாக எண்ணுவதில்லை. வைகோவின் தூண்டுதலின் காரணமாகவே என்னை நீக்க வேண்டும் என கடிதமும் தீர்மானமும் அனுப்பப்பட்டு வருகிறது.

Durai samy
Durai samypt desk

கடந்த 30 ஆண்டு காலமாக கட்சியில் இருந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தின் காரணமாகவே கடிதம் எழுதி திமுகவில் இணைக்க வலியுறுத்தினேன். நான் அரசியல் வாழ்வில் இருந்து விலகி அண்ணா பெரியார் பாதையில் பயணிக்க இருக்கிறேன். என்னை கட்சியில் இருந்து நீக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ வைகோ, உள்ளூர பயம் கொண்டிருக்கிறார் " என தெரிவித்த அவர், தான் போட்டி பொதுக்குழு எதுவும் நடத்தவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com