மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோweb

“நான் ஆதாரங்களை வெளியிடும் காலம் வரும்..!” – வைகோ

“அண்ணாவின் மண்ணில் இருந்துகொண்டு பெரியாரை மண் என்று பேச எப்படி தைரியம் வந்தது? இது திராவிடர் மண்” என வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.
Published on

பேரறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலைய அருகில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடந்தது. இதில் மதிமுக வின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா நினைவிடத்தில் வைகோ பேட்டி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

அதன் தொடர்ச்சியாக மதிமுக-வின் பொதுச்சயலாளர் வைகோ அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

பேரணிக்கு பிறகு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,

“மாநில சுயாட்சியை மோடி குழிதோண்டி புதைத்துவிட்டார்”

“ ‘தமிழ்நாடு வஞ்சிக்கப்படுமானால் மீண்டும் பிரிவினை கோரிக்கை குரல் எழும்’ என பேசியவர் அறிஞர் அண்ணா. ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சி உள்ள மாநிலமாக அமைய வேண்டும் என்று கூறினார் அவர். ஆனால் மோடி இன்று அதனை குழி தோண்டி புதைத்து விட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

வைகோ vs பிரதமர் நரேந்திர மோடி
வைகோ vs பிரதமர் நரேந்திர மோடிPT WEB

“நெஞ்சில் ஈட்டி சொருகியது போல...”

நான் அண்ணாவின் படையில் 60 ஆண்டுகள் இருந்துள்ளேன். இதில் 30 ஆண்டுகள் திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றினேன். மொத்தம் 60 ஆண்டுகள் என்னை நானே பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு பொது மக்களுக்கு பணியாற்றி வருகிறேன்.

சில தமிழின துரோகிகள் அண்ணாவையே கொச்சைப்படுத்தி இன்று மேடையில் பேசுகிறார்கள், மூடநம்பிக்கைகளை உடைக்க பெரியார் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளாவில் உள்ள வைக்கத்திலும் போராடினார். அப்படிப்பட்ட பெரியாரை நெஞ்சிலே பூசிக் கொண்டிருக்கிற எங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஈட்டி சொருகியது போல, ஒரு சிலர் பேச புறப்பட்டு இருக்கிறார்கள்.

“இது திராவிடர் மண்..”

அண்ணாவின் மண்ணில் இருந்து பெரியாரே மண் என்று பேச எப்படி தைரியம் வந்தது? இது திராவிடர் மண்... அறிஞர் அண்ணா நிலைத்து வாழ்வார், பெரியார் நிலைத்து வாழ்வார், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அவர்களின் பெயர்கள் பதிவாகி இருக்கும்..

மோடிக்கு எச்சரிக்கை...

நரேந்திர மோடி அவர்களே உங்களை எச்சரிக்கிறேன்... அண்ணா கல்லறையின் முன்பு நின்று சொல்கிறேன்... நெருப்போடு விளையாடுகிறீர்கள், ஒரே நாடு என்றால் இந்தி பேசுகின்ற நாடு மட்டும்தான் இருக்கும், ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள், அனைவரும் சமமாக நடத்தப்படும் என்று சொல்லுகிறவர்கள் நாங்கள், வந்திருக்கின்ற ஆபத்து ஜனநாயகத்திற்கு வந்திருக்கின்ற ஆபத்து; சம நீதிக்கு வந்திருக்கின்ற ஆபத்து தமிழ் இனத்திற்கு என்ற உணர்வோடு பெரியாரை மதிமுக சார்பாக எங்களின் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

“பிரபாகரனுடன் நான் இருந்ததற்கான ஆதாரங்கள் வெளியிடும் காலம் வரும்..”

ஒருவர் அப்பட்டமான பச்சை பொய்களை ஒருவர் பேசிய வருகிறார். ஈழத்திற்கு நான் சென்றிருந்தபோது பிரபாகரனுடன் அங்கு தங்கி இருந்தேன், அங்கு நடந்ததை பற்றி நான் பத்திரிகைகளில் சொல்லவில்லை. பிரபாகரனுடன் நாங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் பல இருக்கின்றன. ஆனால் நான் அதனை வெளியிடவில்லை, வெளியிடுவதற்கான காலங்கள் வரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடத்திலும் இதனைப் பற்றி பேசியிருக்கிறேன்.

தற்போது ஒருவர் பிரபாகரனை பற்றி பச்சை பொய் பேசி வருகிறார், இது அநீதி அநீதி.

“ஒன்றிய அரசு ஓரவஞ்சகம் செய்து வருகிறது”

தற்போது முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது, ஒன்றிய அரசு ஓரவஞ்சகம் செய்து வருகிறது, 2026 இல் திமுக பெரும்பான்மை பெறும், அதில் பெரு நம்பிக்கை இருக்கிறது. இது திராவிட பூமி. காவிரி பாய்கின்ற பூமி. வீராதி வீரர்கள் வேலை தூக்கிக்கொண்டு பல நாடுகளை கைப்பற்றிய பூமி. இந்துத்துவா தத்துவத்தை மோடி கொண்டு வர முயற்சி செய்கிறார். டெல்லி இல்லாமல் வாரணாசியை தலைநகரமாகக் கொண்டு வரவேண்டும் என துடிக்கிறார்கள்.

வருகின்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையில்  கூட்டணி வெற்றிபெறும். அதற்கு ‘வாழ்த்து சொல்லுங்கள் அண்ணா’ அவர்களே என அண்ணாவிடமே இன்று கேட்டுவிட்டு வருகிறேன். முதலமைச்சர் அவர்கள் நடத்துகின்ற ஜனநாயகப் போரில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com