பட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு வினாத்தாள் - வைகோ கடும் கண்டனம்

பட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு வினாத்தாள் - வைகோ கடும் கண்டனம்

பட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு வினாத்தாள் - வைகோ கடும் கண்டனம்
Published on

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா அரசு 2014 இல் மோடி தலைமையில் பொறுப்பேற்றதிலிருந்து பாடநூல்களில் இந்துத்துவ சனாதன கருத்துக்களை திணிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசும் துணைபோய்க் கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்ட 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற கருத்தைத் திணிப்பதற்கு, “தமிழ் கி.மு. 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததும் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாக தமிழக கல்வித்துறை அறிவித்தது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் மதவாத சனாதன கும்பலின் சிறுபான்மை, தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் இடம்பெற்று இருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர், முஸ்லீம்கள் யார்? தலித் என்றால் என்ன? தலித் தலைவர் யார்? என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
தலித்துகள் என்பதன் பொருள் என்ன? கேள்விக்கு விடையாக “அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்” என்று பதில் தரப்பட்டுள்ளது. இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் பதிலாக குறிப்பிட வேண்டும்.

இதே போன்று பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன? என்ற கேள்விக்கு, “முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள், நோன்பு காலங்களில் தூங்குவதில்லை” என்று பட்டியல் தரப்பட்டுள்ளது.

டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, “பணக்காரர், ஏழை, பட்டியலினத்தவர், பொருளாதாரம்” என்று 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மை மக்களையும், பட்டியலின மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தி உள்ள கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com