வங்கிகள் ரவுடி கும்பல் மூலம் விவசாயிகளை தாக்குவதற்கு வைகோ கண்டனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கடன் பிரச்னையால் உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். கந்துவட்டிக் கும்பல் போல வங்கிகள் செயல்படுவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், வங்கிகள், தனியார் முகவர்களை ஏவிவிடுவதும், ரவுடிக்கும்பல் மூலம் விவசாயிகளை தாக்குவதும், இதுபோன்ற உயிரிழப்புகள் நேர்வதும் கடும் கண்டனத்திற்குரியது. பெரு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி ஞானசேகரன் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.